கொங்கு வேளாளர்களுக்கு இட ஒதுக்கீடு * நாமக்கல் மாநாட்டில் கோரிக்கை
மார்ச் 23,2009,00:00 IST
நாமக்கல் :"கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' எனக் கோரி, நாமக்கலில் நேற்று நடந்த கொங்கு இளைஞர் பேரவை அரசியல் எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில், கோவை செழியனின் 9ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மற்றும் கொங்கு இன அரசியல் எழுச்சி மாநாடு நாமக்கலில் நடந்தது.மாநாட்டுக்கு மாவட்ட செயலர் வேலுசாமி தலைமை வகித்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கு என தனியாக கல்வி வேலைவாய்ப்பில் மாநில அரசு 20 சதவீதமும், மத்திய அரசு 2 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.அரசு ஊழியர்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளும், விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். கிராமப்புற மக்கள் பெருநகரங்களுக்கு வேலை தேடிச்செல்லும் நிலையை மாற்றி, கிராமங்கள் செழிக்க அடிப்படை வசதி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தரமான சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும்.கோவில்கள் குடமுழுக்கு செய்யும் போது தாய்மொழியான நம் தமிழ் மொழியிலேயே நடக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கி முறைப்படுத்த வேண்டும்.பவானி, நொய்யல், அமராவதி, காவிரிநதிகள் பல்வேறு ஆலைக் கழிவுகளால் மாசுபட்டு விவசாய நிலமும், மக்களின் குடிநீரும் மாசுபடுவதை தடுக்க கழிவுநீரை குழாய் வழியாக கடலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலைக் கழிவுகளையும் இத்திட்டத்துடன் சேர்த்து அனைத்து நதிகளையும் மாசற்ற நதிகளாக பராமரித்து மண்ணையும், மக்களையும் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.நசிந்து வரும் லாரி தொழிலை பாதுகாக்க உலக சந்தையில் 150 டாலராக விற்ற கச்சா எண்ணெய் 45 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஒரு லிட்டர் டீசலுக்கு, 10 ரூபாய் வரை விலை குறைக்க வேண்டும்.தமிழக அரசு மதுக்கடைகளை உடனடியாக மூடி பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, நாமக்கல் - சேலம் சாலை முதலைப்பட்டியில் பேரணி துவங்கியது. மாநில அமைப்பாளர் தனியரசு தலைமையில் பேரணி நடந்தது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினரின் அரசியல் எழுச்சி பேரணியால், நாமக்கல் நகரமே குலுங்கியது.
