கொங்கு இளைஞர் பேரவை இன்று மாநாடு*தேர்தலில் போட்டியிடவும் முடிவு
மார்ச் 22,2009,00:00 IST
நாமக்கல்:""மாநாடு முடிந்தவுடன் பேரவையின் செயற்குழு, பொதுக்குழு கூடி லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்,'' என, கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப் பாளர் தனியரசு தெரிவித்தார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் திருச்செங்கோடு ரோடு பொன்னர் சங்கர் திடலில் கோவை செழியன் 9ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, கொங்கு இன அரசியல் எழுச்சி மாநாடு இன்று நடக்க உள்ளது. மாநாட்டிற்கு 100 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்து, சுத்தம் செய்யப்பட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேடை 60 அடி அகலம், 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி அளவில் மாநாட்டு மேடையில் இளைஞர் பேரவை நிர்வாகிகள் பேசுகின்றனர். மாநாட்டு திடலில் இரவை பகலாக்கும் வகையில் 50 அடி உயரத்தில் 10 இடங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மாநாட்டிற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து ஏழு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
நாமக்கல் நகர் முழுவதும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கொடி, கட்-அவுட் கள் தோரணங்கள் கட்டப்பட்டுள் ளன. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் கொங்கு இன சொந்தங்கள் எந்த வித பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் அணி, தொண்டர் படையினர் மற்றும் போலீசாருக்கும் ஒத்துழைப்பு கொடுத்து மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும்.
மாநாடு முடிந்தவுடன் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி, லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். கோவை செழியன், தீரன் சின்னமலை, வேலுசாமி ஆகியோர் உருவப்படம் திறந்து மலர் அஞ்சலி செலுத்தப்படும். மாநாட்டில் அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இவ்வாறு தனியரசு தெரிவித்தார்.
