பொன்னர் - சங்கர் ஆய்வு நூல் வெளியீடு - கொங்கு இளைஞர் பேரவை கடும் எதிர்ப்பு
செவ்வாய்க்கிழமை, ஜூலை 20, 2010, 14:17[IST]
கரூர்: கரூரில் பொன்னர் - சங்கர் என்ற ஆய்வு நூலை எழுத்தாளரும், ஓவியருமான கரூர் பரணன் வெளியிட்டார். ஆனால் இதை எதிர்த்து கொங்கு அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் புகழ் பெற்ற சமூகவியல் ஆய்வு நூல்களில் ஒன்று பொன்னர் - சங்கர் நூல். இந்த நூலை கடந்த காலத்தில் திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ளார்.
இந்த நிலையில், பொன்னர் சங்கர் ஆய்வு நூலை கரூரைச் சேர்ந்த பரணன் என்பவர் ஆய்வு செய்து வெளியிட்டார். இதை வரலாற்று ஆய்வாளர் தமிழ்நாடன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் தமிழர் களம் அமைப்பாளர் அரிமாவளவன், கரூர் பிரஸ் கில்டு பொருளாளர் இரத்தினம், சமூக சேவகர் புல்லட் கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், பரணன் எழுதிய இந்த நூலில் கொங்கு வேளாளர் சமூகத்தை கடுமையாக இழிவுபடுத்தி எழுதியுள்ளதாக கூறி தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கரூர் மாவட்ட அமைப்பாளர் கார்வேந்தன் தலைமையில் நூலை வெளியிட கூடாது என கோரி கரூர் பஸ் நிலையம் முன்பு ஆர்பாடத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.