ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வு நேற்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் நடைபெற்றது.
2009 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, போர்க்குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று (16-5-12) மாலை 4 மணிக்கு சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நடைப்பெற்றது.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த தபசி குமரன், அமர்நாத், இயக்குனர் புகழேந்தி தங்கராசு,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா, தனியரசு, பாவலர் அறிவுமதி, உட்பட பலர் கலந்துக்கொண்டு கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர்.