நாமக்கல்லில் வன்முறை: 8 பஸ்கள் உடைப்பு
First Published : 13 Nov 2009 02:09:43 AM IST

நாமக்கல்,நவ. 12 நாமக்கல்லில் புதன்கிழமை நள்ளிரவில் நடந்த வன்முறை சம்பவத்தில் 8 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் உ. தனியரசு, திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு ஆதரவாளர்களுடன் காரில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
புதன்கிழமை மாலை எத்திலோடு அருகே காட்டுப்பகுதியில் வரும்போது தனியரசு வந்த காரை மர்ம கும்பல் வழிமறித்து தாக்கியது. கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தை கண்டித்து நிலக்கோட்டையில் சாலை மறியல் நடந்தது.
இதனைத் தொடர்ந்து சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. நாமக்கல் பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனங்களில் உருட்டுக் கட்டைகளுடன் பேருந்து நிலையத்துக்குள் வந்து பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து கற்களை வீசினர். இதில், 8 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன.