கொங்கு இளைஞர் பேரவை 11 தொகுதியில் தனித்து போட்டி
ஏப்ரல் 10,2009,00:00 IST
கிருஷ்ணகிரி : ""வரும் லோக்சபா தேர்தலில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை 11 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது,'' என, கொங்கு இளைஞர் பேரவை மாநிலத் தலைவர் தனியரசு தெரிவித்தார். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியின் கொங்கு இளைஞர் பேரவை வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. கொங்கு இளைஞர் பேரவை மாநிலத் தலைவர் தனியரசு தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி வேட்பாளராக, பேரவையின் மாவட்ட அமைப்பாளர் சந்திரன் அறிவிக்கப்பட்டு, அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதன்பின் தனியரசு நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 11 லோக்சபா தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. நாமக்கல் தொகுதியில், நான் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு தனியரசு கூறினார்.