தனியரசு கார் தாக்குதலுக்கு கண்டனம்; பஸ்கள் மீது கல் வீச்சு
நவம்பர் 13,2009,00:00 IST
பழநி: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் தனியரசு கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, பழநி அருகே பஸ்கள் மீது கல் வீச்சு நடந்தது. டிரைவர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். தனியரசு தன் ஆதரவாளர்களுடன் நிலக்கோட்டை அருகே இ.காமாட்சிபுரம் மந்தையம்மன் கோவில் திருவிழாவிற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். திரும்பும் வழியில் இவர்களின் கார்களை, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் கோட்டைச்சாமி உட்பட 50 பேர் தாக்கினர். இதில் தனியரசுக்கும், கரூர் மாவட்ட கொங்கு பேரவை அமைப்பாளர் கார்வேந்தனுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இது தொடர்பாக விளாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோட்டைச்சாமி கோஷ்டியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், தனியரசு, காமாட்சிபுரம் ஜீவானந்தம், சந்திரன் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். நிலக்கோட்டை வி.ஏ.ஓ., ரமேஷ்பாபு போலீசில் கொடுத்த புகாரில், "தனியரசும், அவரது ஆதரவாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டு, பொது மக்களுக்கு இடையூறு செய்தனர்' எனக் கூறியுள்ளார். இந்த புகார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் நடந்த கருத்தாண்டிபட்டி, காமாட்சிபுரம் கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்கள் மீது தாக்குதல்: நேற்று காலை அடையாளம் தெரியாத கும்பல் டூவீலர்களில், பழநி அருகே நரிக்கல்பட்டி, மானூர், தும்பலப்பட்டி, சின்னகலையம்புத்தூர், பச்சளநாயக்கன்பட்டி ஆகிய ஊர்கள் வழியாக சென்றது. தனியரசு கார் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அவர் தந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷமிட்டபடி, கற்களை வீசியதில் அவ்வழியாகச் சென்ற இரண்டு தனியார் பஸ்களும், நான்கு அரசு பஸ்களும் சேதமாகின. பழநி மற்றும் அதன் புறநகரில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.