நவம்பர் 13,2009,00:00 IST
கரூர்: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் தனியரசு, கரூர் மாவட்ட அமைப்பாளர் கார்வேந்தன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் தாக்கப்பட்டதாக, கரூர் கே.ஜி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்றுவரும் தனியரசு கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காமாட்சிநகர் கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, நேற்று (நேற்று முன்தினம்) இரவு எட்டு மணியளவில் 40 பேர் கொண்ட கும்பல் எங்களை வழிமறித்து தாக்கியது. அரிவாளால் வெட்டப்பட்டதில் எனது கையிலும், கார்வேந்தன் தலையிலும் காயம் ஏற்பட்டது. நிலக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் கோட்டைசாமி ஏற்பாட்டில் இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. தி.மு.க.,வினர் தான் தாக்குதலில் ஈடுபட்டனர்.
நாங்கள் அறவழியில் கட்சியை கொண்டுசெல்வது இவர்களுக்கு பிடிக்கவில்லை. எங்களை தாக்கிய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து, எங்கள் உயிருக்கும், உடமைக்கும் அரசு பாதுகாப்பு தரவேண்டும். தாக்குதல் சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த போது, முதலில் புகார் வாங்கக்கூட மறுத்தனர். சாலை மறியல் செய்த பிறகே புகாரை பெற்றனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, தனியரசு மற்றும் கார்வேந்தன் திண்டுக்கல் மாவட்டத்தில் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், கரூர் நகரில் கட்சியினர் சிலர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சாலைமறியல் செய்ய முயன்றனர். போலீஸார் தலையிட்டு பிரச்னையை தவிர்த்தனர்.