மோசமான சாலைகள்: கொங்கு இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்
First Published : 24 Sep 2009 05:08:37 AM IST
கரூர், செப்.23: கரூர் பகுதியில் மோசமான நிலையிலுள்ள சாலைகள் செப்பனிடப்படாததைக் கண்டித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் கரூரில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் த. கார்வேந்தன் தலைமை வகித்தார். கரூர் மாவட்டம், வாங்கல் சாலை அரசுக் காலனி பிரிவிலிருந்து திருமுக்கூடலூர் வரையும், நெரூரிலிருந்து வாங்கல் வரையிலான சாலைகளும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. காவிரி, அமராவதி ஆறுகளிலிருந்து தினமும் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் தார்ச்சாலை மண்மேடாக மாறி வருகிறது.
இதனால் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்தில் உயிர்ப் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், கரூர் நகருக்கு வரும் குடிநீர் குழாய்களில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்ய சாலைகள் பல இடங்களில் வெட்டப்பட்டு, பல இடங்களில் சரியாக மூடப்படாமல் உள்ளன.
இவ்வாறு பல்வேறு வழிகளில் சேதமடைந்த சாலையினால் அப்பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்று ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். இதன்மீது நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வடிகால் வாரிய துறை அலுவலர்களைக் கண்டித்தும், சாலையைச் செப்பனிட கரூர் கோட்டாட்சியரை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளர் டி. சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வடிவேல், முருகேசன், மூர்த்தி, மகளிர் அணி தலைவி செல்வி மற்றும் கரூர் கிழக்கு ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.