அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம் : கொ.இ.பே., தனியரசு அறிவிப்பு
மார்ச் 12,2011 IST
சேலம் : ""சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு, கொங்கு இளைஞர் பேரவை தீவிரமாக பாடுபடும்,' என, அதன் நிறுவனர் தனியரசு தெரிவித்தார். தி.மு.க., கூட்டணியில், கொங்குநாடு முன்னேற்ற கழகம் இணைந்ததால், கவுண்டர் சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், அக்கட்சிக்கு எதிரான, கொங்கு இளைஞர் பேரவையினர், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கட்சி நிறுவனர் தனியரசுவை அழைத்து பேச்சு நடத்தினார். தொகுதியின் ஓட்டு சதவீதம், வெற்றி வாய்ப்பு குறித்து அவரிடம் கேட்டறிந்தார். இறுதியாக, கொங்கு இளைஞர் பேரவைக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது என அறிவித்தார்.தனியரசு கூறியதாவது:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்தோம். மனமகிழ்வுடன் கூட்டணியில் சேர்க்க ஒத்துக் கொண்டார். ஒரு தொகுதி ஒதுக்குவதாக கூறினார், நாங்களும் ஏற்றுக்கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில், பரமத்திவேலூர் தொகுதியை கேட்டுள்ளோம்.நிச்சயம், அத்தொகுதியை ஒதுக்குவார் என நம்புகிறேன். கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு, தீவிரமாக பாடுபடுவோம்.இவ்வாறு தனியரசு கூறினார்.