Posted by admin on August 17th, 2011
சென்னை, ஆக. 16: ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தமிழகத்தில் நிறுத்த வேண்டும் என்று கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ. தனியரசு (பரமத்தி வேலூர்) கோரிக்கை விடுத்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:
ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினால் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. இந்தத் திட்டத்தின் மூலம் மனித உழைப்பை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த மகாத்மா காந்தியின் பெயரை விவசாயத்தை அழிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு சூட்டியுள்ளது. இந்தத் திட்டத்தினால் விவசாயமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையெனில் தென் தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தனியரசு.