நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Monday, September 12, 2011

ஜனாதிபதிக்கு கோரிக்கை


Tuesday, 30 August, 2011   02:41 PM News At MAALAISUDAR
.
சென்னை, ஆக. 30: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி நேரம் முடிந்ததும் அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும்,  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ்  ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.  

அந்த அறிக்கையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில கவர்னரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன். 

மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72ன்படி, குடியரசுதலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன். 

இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும்  என்று  தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.

எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். 

தீர்மானம்
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.  முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்றும், முதலமைச்சரை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்து பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக), கணேஷ் குமார் (பாமக), சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (குடியரசு கட்சி) ஆகியோர் பேசினார்கள்.