நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Monday, November 7, 2011

தனியரசு சின்ன மருது...


தமிழ் சாதிப் படையைத் திரட்டும் ராமதாஸ்

ள்ளாட்சித் தேர்தலின் உஷ்ணம் எகிறும் வேளையில்... 'தமிழ் சாதிகள்தான் இனி தமிழகத்தை ஆள வேண்டும்’ என்று ஓர் அதிரடி அரசியல் பிரகடனம் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் செய்யப்பட்டு உள்ளது!
தேவரின பாதுகாப்புப் பேரவையின் நிறுவன​ரான கதிரேசனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 22-ம் தேதி மதுரை ஒத்தக்கடையில், தமிழ் சாதிகளின் சமூக நீதிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த ஆண்டு இதே நிகழ்ச்சியில், ''வடக்கில் வன்னியர்களும், தெற்கில் தேவர்களும் கைகோர்த்தால், நம்மைத் தவிர வேறு யாரும் தமிழகத்தை ஆள முடியாது!'' என்கிற ரீதியில் பேசிப் பரபரப்பை உண்டாக்கியவர் ராமதாஸ். அந்தப் பார்வையை இன்னும் விசாலப்படுத்தி இந்த முறை, அவரோடு, நாடார் மகாஜன சங்கப் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவர் ராஜமாணிக்கம், வ.உ.சி. பேரவையின் மாநிலத் தலைவர் கணேசன், யாதவர் மகாசபையின் தேசியச் செயலாளர் குணசீலன், ஆளும் கூட்டணியில் உள்ள கொங்கு இளைஞர் பேரவையின் எம்.எல்.ஏ-வான தனியரசு உள்ளிட்டோரையும் அழைத்திருந்தார்கள். குணசீலன், கரிக்கோல்ராஜ் தவிர அத்தனை தலைகளும் ஆஜர்!
''நாம் சின்ன மருது¬​வயும், பெரிய மருதுவையும் பார்த்ததில்லை. இங்கே அமர்ந்திருக்கும் மருத்துவர் ராமதாஸ்தான் பெரிய மருது, தனியரசு சின்ன மருது...'' - என ஆரம்பத்திலேயே அமர்க்களப்படுத்தினார் தேவரின பாதுகாப்புப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவர் முருகேசன்.

அடுத்துப் பேசிய தேவர் சிந்தனை மையத்தின் பசும்பொன் பாண்டியன், ''எங்களைப் பார்த்து ஆதிக்க சாதி என்கிறார்கள். கடவுளைக்கூட கம்பீரமாக நிமிர்ந்து நின்று வணங்கிப் பழக்கப்பட்ட தேவர் இனம், இப்போது 'அம்மா தாயே’ என முதுகு வளைய வணக்கம் போடுகிறதே... அழகிரி சம்சாரத்தை 'எங்கள் குல விளக்கே’னு போஸ்டர் அடிக்கும் அளவுக்கு எங்கள் இனம் ஒடுக்கப்பட்டுக்கிடக்கிறதே! நானும், திருமாவளவனும் சண்டை போட்டால் தமிழன் பின்னுக்குத் தள்ளப்படுவான். அப்புறம், தொப்புளில் பம்பரம் விட்டவர்தான் எதிர்க் கட்சித் தலைவனாக வருவார்; நாளைக்கு முதலமைச்சர் ஆவதற்கும் அச்சாரம் போடுவார்...'' என்று அரங்கத்தைக் கலக்கினார்.
''நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்று சிந்திப்பதே தேச விரோதம் என்று நினைக்கும் மூடர்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நான் பரமத்திவேலூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டேன். அங்கே பிரசாரத்துக்கு வந்த ஐயா ராமதாஸ், 'தனியரசுவின் நோக்கமும் நம்முடைய நோக்கமும் ஒன்றுதான்’ என நினைத்ததால், பா.ம.க. வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு போதிய அழுத்தம் கொடுக்காமலேயே சென்றார். இன்றைக்குத் தொடங்கி இருக்கிற இந்த தமிழ் சாதிகள் இயக்கத்தை சமரசம் இல்லாமல் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தமிழகம் முழுக்க வலுப்படுத்தினால், நாமே இந்த நாட்டை ஆளுகிற நிலை வரும்!'' என்று தடதடத்தார் தனியரசு.
'தனித் தமிழர் சேனை’ தலைவர் நகைமுகன், ''தமிழ் சாதிகள் ஒன்றுக்கொன்று மோதாமல் இருக்க வேண்டுமானால், நமது பொது எதிரியை அடையாளம் காட்ட வேண்டும். தமிழ்ச் சாதிகளை ஆள விடாமல் சூழ்ச்சி செய்து துண்டாடுகிற சக்தி எதுவோ, அதுதான் நமக்குப் பொது எதிரி. தலைமை ஏற்கும் பொறுப்பை ஐயா ராமதாஸ் ஏற்க வேண்டும்!'' என்று உசுப்பேற்றினார்.
கடைசியாகப் பேசிய டாக்டர் ராமதாஸ், ''திராவிடத்தாலும் வீழ்ந்தோம்; தேசியத்தாலும் வீழ்ந்தோம். இனி தமிழ் சமூகங்களை ஒன்றிணைத்து அரசியலை வென்றிடுவோம். அதற்காகத்தான் திராவிடக் கட்சிகளோடு இனி உறவில்லை என்று துணிச்சலுடன் முடிவு எடுத்து இருக்கிறோம். தமிழ்ச் சாதிகளை அடையாளம் கண்டு அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உள்ளாட்சித் தேர்தல் முடியட்டும். அப்புறம் பாருங்கள், என்ன நடக்கிறது என்று... சென்னையில் 40, 50 தமிழ் சாதிகளை அழைத்துக் கூட்டம் போட்டுப் பேசுவேன். அத்தகைய கூட்டங்களை மற்ற மண்டலங்களிலும் போடுவோம். திராவிடம் என்ற சொல்லை யார் சொன்னாலும் அவர்கள் நமது பொது எதிரி. மாவட்டத்துக்கு 100 படித்த இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அரசியல் கல்வியைப் பயிற்றுவியுங்கள். அப்போதுதான் தமிழ் சாதி ஆள வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் வளரும்...'' என்று அழுத்தம் கொடுத்து முடித்தார்.
ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களையும் அழைப்பதாக இருந்தார்களாம். பரமக்குடியின் கலவர வெப்பம், கருத்தரங்க மேடையில் எதிரொலிக்கலாம் என்பதற்காகவே அந்த முயற்சியைக் கைவிட்டார்களாம். கருத்தரங்க மண்டபத்தைவிட்டுக் கிளம்பும்போது, ''மாவட்டத்துக்கு 100 இளைஞர்கள் வீதம் 1,000 இளைஞர்களைத் தேர்வு செய்து கொடுங்கள். அவர்களுக்கான வித்தியாசமான அரசியல் தளத்தை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. பக்குவப்பட்ட இளைஞர் படையை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளை ஓட ஓட விரட்டுவோம்...'' என்று சொல்லிவிட்டு காரில் ஏறினாராம் ராமதாஸ்!
Thanks